திருச்சியில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்பு
கரூர், திருச்சியில் வரும், 30ம் தேதி நடைபெறும், ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதிய குறைதீர் முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு, தீர்வு காண ஓய்வூதிய குறை தீர் முகாம் திருச்சி மன்னார்புரத்தில், ராணுவ பரேடு மைதானத்தில் வரும், 30 காலை, 11:00 மணி முதல் மாலை, 6.00 மணி வரை நடக்கிறது. முகாமில் உயிர் சான்று அடையாளம் காணுதல், ஓய்வூதியத்தில் பெயர் மற்றும் இதர தகவல்களை திருத்துதல், ஓய்வூதிய தொகை திருத்துதல், ஆதார் புதுப்பித்தல், குடும்ப ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு பணிகளுக்காக தனித்தனியே ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளன. அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள், அனைத்து வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார். எனவே, 88073 80165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினார்.