கோடை பயிர் சாகுபடி விபரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு
கரூர்:''கரூர் மாவட்டத்தில், கோடை பயிர் சாகுபடி விபரங்கள், டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, நெரூர் பகுதியில், வேளாண்மை துறை சார்பில், கோடை பயிர் சாகுபடி விபரங்களை, டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் தங்கவேல் கூறியதாவது: வேளாண் பணிகளை மேற்கொள்ளும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விபரங்கள் அடங்கிய அனைத்து தரவுகள் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்ட பலன்கள் வழங்கும், அனைத்து அரசு துறைகளுக்கும், இந்த தரவுகள் வழங்கப்படும்.கரூர் மாவட்டத்தில், 200 வருவாய் கிராமங்களில் உள்ள, ஆறு லட்சத்து, 6,689 உட்பிரிவுகளில் கோடை பயிர் சாகுபடி விபரங்கள், டிஜிட்டல் முறையில் கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை, இரண்டு லட்சத்து, 11 ஆயிரத்து, 469 உட்பிரிவுகளில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் இந்த ஒருங்கிணைந்த வேளாண் தரவு, உள்ளீட்டு பணியை மேற்கொண்டு, அடையாள எண் பெற்று பயன் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவானந்தம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் தியாகராஜன், முசிறி எம்.ஐ.டி., வேளாண்மை பேராசிரியர்கள், மாணவியர் உடனிருந்தனர்.