| ADDED : ஆக 07, 2011 01:54 AM
கரூர்: டில்லியில் நடக்கும் தேசிய அறிவியல் கண்காட்சியில், ஏழை மாணவர் பங்கேற்க அ.தி.மு.க., எம்.எல்.ஏ., காமராஜ் 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த மணவாடி பெரிய காலனியை சேர்ந்த சிவக்குமார்-விஜயா தம்பதியினரின் மகன் அஜித்குமார் (14). மணவாடி அரசு நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர். கரூர் வெண்ணெய்மலையில் உள்ள கொங்கு பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான 'இன்ஸ்பியர்' விருதுக்கான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றார். தண்ணீர் மூலம் இயங்கும் பொக்லைன் இயந்திரத்தை காட்சிக்கு வைத்திருந்தார். அவரின் படைப்பு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றது. சென்னையில் நடந்த அறிவியல் மாநாட்டில், கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்ற குழுவில் அஜித்குமார் பங்கேற்றார்.அங்கு அவரது படைப்பு சிறந்த படைப்பாக கருதப்பட்டது. அதையடுத்து, அகில இந்திய அளவில் டில்லியில் ஆக., 14,15,16ம் தேதிகளில் நடக்கும் அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியில் பங்கேற்க விரும்பிய அஜித்குமாருக்கு நிதி வசதி இல்லாததால், டில்லிக்கு சென்று போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தன்னுடைய நிலை குறித்து கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜிடம் தெரிவித்தார். அதையடுத்து, எம்.எல்.ஏ., காமராஜ், தனது சொந்த பணம் 10 ஆயிரம் ரூபாயை அஜித்குமாருக்கு வழங்கினார். எம்.எல்.ஏ., சம்பளத்தை தானமாக வழங்கும் காமராஜ், இளம் விஞ்ஞானிக்கு சொந்த பணத்தை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.