உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தேர்தல் விதிமுறைகள் மீறல் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்குமா?

கரூரில் தேர்தல் விதிமுறைகள் மீறல் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்குமா?

கரூர்: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடக்காததால், கரூரில் தேர்தல் விதிமுறை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17 ம் தேதி மற்றும் 27 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் தேதி கடந்த 21 ம் தேதி இரவு அறிவிக்கப்பட்டது. மறுநாள் 22 ம் தேதி முதல் மனுதாக்கல் தொடங்கி, நாளையுடன் (29 ம் தேதி) முடிகிறது. கடந்த 21 ம் தேதி இரவு முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது, அனுமதியில்லாமல் ஊர்வலமாக செல்வது. வாகனங்களில் அதிகளவில் ஆதரவாளர்களை ஏற்றி செல்வது. வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போது நான்கு பேருக்கு அதிகமாக செல்வது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது. பட்டாசு மற்றும் வெடிகளை வெடிக்க செய்து பீதியை கிளப்புவது. சுவரொட்டிகள் மற்றும் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ள ஃபிளக்ஸ் பேனர்களை அகற்றப்படாமல் இருப்பது உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் கொடிகட்டி பறக்கிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி கரூர் கலெக்டர் ÷ஷாபனா தலைமையில் கடந்த 11ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.அதில், உள்ளாட்சி தேர்தல் விதிமுறை குறித்து, பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சந்தேகம் எழுப்பிய போது, 'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்' என கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பத்மாவதி தெரிவித்தார். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நாளையுடன் (29ம் தேதி) மனுதாக்கல் செய்வது நிறைவு பெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரி பத்மாவதி தெரிவித்தப்படி கரூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 'மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து, உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்' என அரசியல் கட்சி நிர்வாகிகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை