இதயநோய் பிரிவில் டாக்டர் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சையின்றி அவதி
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இதய நோய் பிரிவு டாக்டர் இல்லாததால், நோயாளிகள் சிகிச்சை இன்றி தவிக்கின்றனர்.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தோல், இருதயம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரு-கின்றன. 880 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். நீண்ட நாட்களாக இதய நோய் டாக்டர் விடுமுறையில் இருப்பதால், நோயாளிகள் தவித்து வருகின்றனர்.இது குறித்து, அரசு மருத்துவக் கல்லுாரி அலுவலர்கள் கூறியதாவது: உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கொரோனாவுக்கு பின் இதய பாதிப்பு, பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயது முதல் முதியவர்கள் வரை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. இதய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை. இதய பைபாஸ் அறுவை சிகிச்சையுடன், ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற இதயம் தொடர்பான உயிர்காக்கும் சிகிச்சைகளும் அளிக்கும் வசதி, இந்த மருத்துவ கல்லுாரியில் கிடையாது.ஆஞ்சியோகிராம் சிகிச்சை மூலம் இதயத்தில் அடைப்பு உள்ளதா என கண்டறிய, கேத் லேபில் கருவி போன்ற அடிப்படை வசதி கூட, இன்னும் செய்யப்படாமல் உள்ளது. இ.சி.ஜி. எக்கோ போன்ற கருவிகள் இருப்பதால், நோயாளி ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டால், என்ன பிரச்னை என்பதை இதய நோய் பிரிவு டாக்டர் கண்டறிய முடியும். அவருக்கு, உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க முடியும்.தற்போது, இதய நோய் பிரிவு டாக்டர் விடுமுறையில் சென்று விட்டதால், திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த இதய நோயாளிக்கு, பணியில் உள்ள டாக்டர் கொண்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், 2 மணி நேரத்திற்கு மேல் காலதாமதத்தால் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இவ்வாறு கூறினர்.இது குறித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் லோகநாயகி கூறுகையில், '' கடந்த ஒரு மாதமாக இதயம் நோய் பிரிவு டாக்டர் விடுப்பில் உள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்,'' என்றார்.