உடல் உறுப்பு தானம் செய்வதாக அதிகாரியிடம் மனு அளித்த மூதாட்டி
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 75 வயது மூதாட்டி தனது உடல் உறுப்பை தானம் செய்வதாக கூறி, மனு அளித்தது வியப்பில் ஆழ்த்தியது.அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. அப்போது, பள்ளப்பட்டி பட்டாணி தெருவில் வசிக்கும் கனகவல்லியம்மாள், 75, என்ற மூதாட்டி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அலுவலர்களிடம், தனது உடல் உறுப்பை தானம் செய்வதாக மனு அளித்தார். இதையடுத்து தாசில்தார் மகேந்திரன், நகராட்சி தலைவர் முனவர் ஜான் ஆகியோர், மூதாட்டியை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.பின் மூதாட்டி கனகவல்லியம்மாள் கூறுகையில், ''ஏற்கனவே 2010ல், திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் தானம் செய்வதாக கூறி மனு அளித்திருந்தேன். வயது மூப்பு காரணமாக அதனை ஏற்க மறுத்து விட்டனர். தற்போது இம்முகாமில் மனு அளித்துள்ளேன். என் மனுவை ஏற்று, என் உடல் உறுப்பை நான் இறந்த பிறகு, யாரேனும் ஒருவருக்கு பயன்படும் வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். இதை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் வியப்படைந்தனர்.