உட்கட்சி பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்ட கரூர் பா.ஜ., மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல்
கரூர்: கடந்த, 5ல், உட்கட்சி பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்ட, பா.ஜ., கரூர் மாவட்ட தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது.தமிழகத்தில், பா.ஜ., அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கிளை தலைவர்கள், மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, கரூரில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவர் தேர்தல் கடந்த, 5ல், நடந்தது. அப்போது உட்கட்சி பிரச்னை காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும், கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவருக்கு தேர்தல் நேற்று நடந்தது.இதில், மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மணி முன்னிலையில் தேர்தல் நடந்தது. தற்போதைய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத் தலைவர் செல்வன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மண்டல தலைவர் கார்த்திகேயன் உள்பட, 15 பேர் மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், மாவட்ட தலைவர் தேர்தலில் வாக்களிக்க, 61 பேர் தகுதி பெற்று இருந்தனர். அதில், 59 பேர் வாக்களித்தனர். கடந்த தேர்தலில் பிரச்னை ஏற்பட்டதால், நேற்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக வாக்களிக்கும் இடத்தில், யாருக்கும் மொபைல் போன் அனுமதியில்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் முதற்கட்டமாக, 33 மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நேற்று தேர்தல் முடிந்த கரூர் உள்பட மற்ற மாவட்டங்களின், மாவட்ட தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.