அதிக மகசூல் தரும் சேனைக்கிழங்கு அரவக்குறிச்சி விவசாயிகள் மகிழ்ச்சி
அரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், சேனைக்கிழங்கு சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஏக்கருக்கு, ஆறு டன் வரை மகசூல் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சின்னதாராபுரம், தலையூர், ஒத்தமாந்துறை, நேருநகர், புளியம்பட்டி, தொக்குப்பட்டிபுதுார், தொக்குப்பட்டி, சீரங்ககவுண்டனுார், ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சேனைக்கிழங்கு சாகுபடி பரவலாக நடக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யப்படும் இந்த பயிர், உள்ளூர் விவசாயிகள் விரும்பி செய்யும் முக்கிய தொழிலாக திகழ்கிறது. கிலோவுக்கு, 40 ரூபாய் வரை விலை கிடைப்பதால், நல்ல வருமானம் கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, விவசாயி குழந்தைசாமி கூறியதாவது:சேனைக்கிழங்குடன் மஞ்சள் மற்றும் கூடுவை பயிர்களையும் இணைத்து சாகுபடி செய்கிறோம். அமராவதி வாய்க்கால் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி பத்தாண்டுகளாக சேனைக்கிழங்கு பயிரிட்டு வருகிறோம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நல்ல மகசூல் கிடைக்கிறது. அரசு தரப்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட்டால், இந்த சாகுபடி மேலும் அதிகரிக்கும். மேலும், அரவக்குறிச்சி பகுதியில் உற்பத்தியாகும் சேனைக்கிழங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. திருமண வைபவங்கள், விழாக்களில் சமையலுக்கு சேனைக்கிழங்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால், சந்தையில் இதற்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. சேனைக்கிழங்கு விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மற்றும் ஊக்குவிப்பு வழங்கினால், அரவக்குறிச்சி பகுதி சேனைக்கிழங்கு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.