நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சாயக்கழிவு கலந்த நீரால் விவசாயிகள் கவலை
நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்புசாயக்கழிவு கலந்த நீரால் விவசாயிகள் கவலைகரூர், அக். 25- நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், சாயக்கழிவு கலந்த தண்ணீர் வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் பெய்யும் மழையால், உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓடி காவிரியாற்றில் கலக்கிறது. பல ஆண்டுகளாக, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சாயப்பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு வருவது நின்றபாடில்லை. திருப்பூர் மாவட்டங்களில் மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதில், மீண்டும் சாயக்கழிவு கலந்த தண்ணீர் நிறம் மாறி வருவதாக கரூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவ மழையால், நொய்யல் ஆற்றில் சில நாட்களாக தண்ணீர் வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. சாயக்கழிவுகளை, சாயப்பட்டறைகளில் இருந்து சட்ட விரோதமாக கலக்கின்றனர். அதை மாசு கட்டுப்பாடு, பொதுப்பணி, வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சாயக்கழிவு கலந்த தண்ணீர், கரூர் மாவட்டத்தில் நொய்யலில் இருந்து காவிரியாற்றில் கலக்கிறது. 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக, காவிரி நீர் தான் உள்ளது.நொய்யல் ஆற்றின் சாயக்கழிவு நீர் கலப்பதால், டெல்டா மாவட்ட விவசாயமும் பாதிக்கப்படுகிறது. அதை தவிர, சென்னை மாவட்ட குடிநீர் தேவைக்கும், வீராணம் ஏரி வாயிலாக காவிரி நீர் செல்கிறது. காவிரியாற்றில் மணல் இருந்தால், சாயக்கழிவை சுத்திகரிக்க வழி ஏற்படும். தற்போது, காவிரியாற்றில் அதிகளவில் மணலும் இல்லை. டெல்டா பாசன மாவட்டங்களில், குறுவை சாகுபடி பணி தொடங்க உள்ளது. நொய்யல் ஆற்றில் சாய கழிவை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.