விஜய் பேசும் இடங்களில் பொதுச்செயலர் ஆய்வு
கரூர், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய், பிரசாரம் செய்ய உள்ள இடங்களை, பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று பார்வையிட்டார்.கரூரில் நாளை, த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என, அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்தது. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, விஜய் பேச போலீசாரிடம் அனுமதி கேட்டு த.வெ.க., சார்பில் மனு வழங்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால், அந்த இடத்தில் விஜய் பேச, போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வேலுசாமிபுரம் ஆகிய இடங்களை நேற்று மதியம் ஆய்வு செய்தார்.பிறகு, கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையாவை சந்தித்து பேசிய ஆனந்த், அரைமணி நேரத்துக்கு பிறகு, எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில், கரூரில் விஜய் பேசும் இடம் குறித்து, முடிவு செய்யப்படவில்லை என, த.வெ.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.