ரூ.4.21 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு பூமி பூஜை
கரூர், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இதில், பெரிய வடுகபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மினி சமுதாய கூடம், மண்மங்கலத்தில், 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம், வாங்கல் தவிட்டுப்பாளையத்தில், 6.50 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, குப்புச்சிபாளையத்தில், 16.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை என மொத்தம், 1.08 கோடி மதிப்பீட்டில், 8 புதிய கட்டடங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆத்தூர் பூலாம்பாளையம் பஞ்., காந்தி நகரில், 45.44 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலையை பலப்படுத்தும் பணி, ஆதிதிராவிடர் குடியிருப்பில், 62.70 லட்சம் ரூபாயில் தார்சாலை, மண்மங்கலம் பெரியார் சமத்துவபுரத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை அமைக்கும் பணி என மொத்தம். 2.79 கோடி மதிப்பீட்டில், 12 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இதன்படி மொத்தம், 4.21 கோடி மதிப்பீட்டில், 22 புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கி மற்றும் திறந்தும் வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.