ஆக்கிரமிப்பில் கரூர் பஸ் ஸ்டாண்ட்; கூட்ட நெரிசலில் பயணிகள் தவிப்பு
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் ஆக்கிரமிப்பால், பயணிகள் சிரமப்படுகின்றனர்.கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. திருச்சி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம் ஆகிய மார்க்கத்திலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். இங்கு, 30க்கும் மேற்பட்ட கடைகள், மாநகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைக்காரர்களும், நடைமேடையை ஆக்கிரமித்து, வியாபார பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர். இத னால், பயணிகள் நடந்து செல்வதில் சிரமப்படுகின்றனர்.கடைகளின் முன்புறம் பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை ஆபத்தான வகையில் காஸ் வைத்து தயாரிக்கின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளதால் பயணிகள், வயதானவர்கள் பஸ்களில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். பஸ்சை விட்டு இறங்கி நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது. தின்பண்டங்கள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்கின்றனர். அவ்வப்போது, மாநகராட்சி அதிகாரிகள் பெயரளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். சில நாட்களில் மீண்டும் ஆக்கிரமித்து விடுகின்றனர்.பயணிகள் உட்காரும் இருக்கைகளை கூட ஆக்கிரமித்து வைத்துள்ளதால், ஆங்காங்கே பயணிகள் கீழே அமர்ந்துள்ளனர். பஸ் நிறுத்தப்படும் டிராக்கில், டூவீலர்களை, பார்க் கிங் செய்துள்ளதால், பஸ்கள் வந்து செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. எந்த அதிகாரிகளும் பஸ் ஸ்டாண்டை கண்டு கொள்வதாக இல்லை. பஸ் ஸ்டாண்ட் பிரச்னைக்கு, மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.