அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அறிவு சாளர நிகழ்ச்சி
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியபள்ளியில் அறிவு சாளர நிகழ்ச்சிஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அறிவுச்சாளர நிகழ்ச்சி தொடர்பாக, 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் நுால் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். கடந்த டிசம்பரில் அரவக்குறிச்சி நுாலகத்தில், 164 மாணவர்கள் உறுப்பினர்களாகினர். 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களில், 75 பேரை தலைமையாசிரியர் சாகுல் அமீது தலைமையில், கலைக்குழு செயலாளர் சகாய வில்சன், கணித பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு ஆகியோர், மாணவர்களை அரவக்குறிச்சி கிளை நுாலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.கிளை நுாலகர் இளைய சபரி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்றார். மேலும் மாணவர்களுக்கு நுாலகத்தின் வசதிகள் குறித்தும், இலக்கியம், கலை, கட்டுரை போட்டி, போட்டி தேர்வு தயாரிப்பு, செய்தித்தாள்கள் வாசித்தல் ஆகியவை தொடர்பாக விளக்கினார். நுாலக பணியாளர்கள் சுகன்யா, பிரவீன் குமார் ஆகியோர், மாணவர்கள் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு உதவினர். புத்தகங்களை, 15 நாட்களுக்கு ஒரு முறை ஒப்படைத்து, புதிய புத்தகங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவும், இன்றைய காலச்சூழலிலே 'வா- சிக்கலாம்' என்று அலைபேசியால் மாணவர்கள் கட்டுண்டு கிடப்பதை விட்டுவிட்டு, 'வாசிக்கலாம்' என்ற நிலையை ஏற்படுத்துவதற்காகவும், கோடை விடுமுறையின் போது நுால்களை எடுத்து படித்து பள்ளிக்குழுவில் பதிவிட்டு பரிசுகளை பெறவும், இந்நிகழ்ச்சி நடைபெற்றது.