ரேஷன் அரிசி மூட்டையில் அளவு குறைவு; பா.ஜ.,புகார்
கரூர், அக். 20- கடவூர் பகுதியில் அனுப்பப்படும் ரேஷன் அரிசி மூட்டையில், அளவு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என, பா.ஜ., கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியம் வரவனை பஞ்சாயத்தில் உள்ள பாப்பணம்பட்டியில் ரேஷன் கடை உள்ளது. இதில், விராலிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து, அனுப்பப்பட்டுள்ள அரிசி மூட்டையின் எடை அளவு குறைவாக உள்ளது. 50.580 எடை இருக்க வேண்டிய அரிசி மூட்டை, 44.580 எடை தான் உள்ளது. கடவூர் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய, 74 கடைகளுக்கும் விராலிப்பட்டி குடோனில் இருந்து தான் அரிசி மூட்டைகள் அனுப்பப்படுகிறது. பல கடைகளில் ஆய்வு நடத்தியபோது. சில அரிசி மூட்டைகளின் அளவு குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.