செங்குந்தபுரத்தில் குடிநீர் வழங்க பராமரிப்பு பணி மும்முரம்
கரூர், கரூர் செங்குந்தபுரத்தில், 18 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி துவங்கியது.கரூர் மாநகராட்சியில், 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 422 பேருக்கு தினமும், 290.74 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.இதில், 1 லிருந்து, 14 வார்டுகளுக்கு வாங்கல் நீரேற்று நிலையத்திலிருந்தும், 15லிருந்து 32 வார்டுகளுக்கு நெரூர் நீரேற்று நிலையத்திலிருந்தும், 33லிருந்து, 48 வரை கட்டளை நீரேற்று நிலையத்திலிருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 24வது வார்டுக்குட்பட்ட செங்குந்தபுரம், 6 முதல், 12 கிராஸ், ராமகிருஷ்ணபுரம் வடக்கு ஆகிய பகுதிகளில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடப்பதால், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, 18 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என, நேற்று முன்தினம் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கரூர் மாநகராட்சி சார்பில் நேற்று, குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி துவங்கியது.