மாநகராட்சி நிர்வாகம் செயல்படவில்லை கவுன்சிலர் கூட்டத்தில் மேயர் புலம்பல்
கரூர்: மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் உள்ளது என, கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் கவிதா பேசினார்.கரூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், கவுன்சிலர்கள் சாதாரண, அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கவிதா தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்:சரண்யா (தி.மு.க.,): வார்டுகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாக தெரு விளக்கு கேட்டும் அமைக்கவில்லை.சுதா (கமிஷனர்): குப்பை சரியான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமை காரணமாக, கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய முடியவில்லை.மேயர் கவிதா: மாநகராட்சியில், 42 துாய்மை பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நிதி நிலைமையை காரணம் காட்டி, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல் எப்படி இருக்க முடியும். கோவை சாலையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்ய, 10 லட்சம் ரூபாய் செலவாகும். அந்த வேலையை கூட அதிகாரிகள் சரி செய்யவில்லை. மக்கள் பிரதிநிதிகள் கேட்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டாமா? இப்படி பதில் சொன்னால், மாநகராட்சி கூட்டத்திற்கு என்ன மரியாதை இருக்கிறது. மொத்தத்தில் நிர்வாகம் செயல்படாமல் உள்ளது. இதனால், அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்.வார்டு வாரியாக நீங்கள் (கமிஷனர் சுதா) ஆய்வு செய்தீர்கள். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். தற்போது, 27 கோடியில் இருந்து, 50 கோடி ரூபாயாக மாநகராட்சி வருவாய் உயர்ந்து இருக்கிறது. நிதி நிலைமையை காரணம் சொல்லாமல், மக்களுக்கு தேவையான வசதி செய்வது அவசியம்.கமிஷனர் சுதா: இந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்தால், அந்த பணி குறித்து அடுத்த கூட்டத்தில் பதில் அளிக்கப்படும்.வேலுசாமி (தி.மு.க.,): 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆற்றில் குழாய் அடித்து செல்லப்பட்டதால், குடிநீர் வினியோகம் செய்ய ஒரு வாரத்துக்கும் மேலாகும் என்கின்றனர். ஒரு தண்ணீர் லாரி வைத்து, எப்படி மாநகராட்சி முழுவதும் தண்ணீர் சப்ளை செய்ய முடியும்.நிருபர்கள் வெளியேற்றம்மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கவிதா, ஆளும் கட்சி கவுன்சிலர்கள் ஆகியோர், அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்று பேசினர். உடனடியாக, 1வது மண்டல தலைவர் சக்திவேல், ''கோரிக்கைகளை வெளிப்படையாக கூட்டத்தில் தெரிவிக்க வேண்டாம். மேயர் கவிதாவிடம் மனுவாக அளிக்க வேண்டும்,'' என்றார். அப்போது, சில கவுன்சிலர்கள், மக்கள் பிரச்னைகளை விவாதம் செய்ய தான், கூட்டம் நடக்கிறது என்று தெரிவித்தனர். இதனால், காரசார விவாதம் நடந்ததால், துணை மேயர் தரணி சரவணன், 'நாளிதழ், 'டிவி' நிருபர்களை, உடனடியாக கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்' என்றார். இதன்பின், நிருபர்கள் வெளியேற்றப்பட்டு, கூட்ட அரங்க கதவுகள் அடைக்கப்பட்டன.மேயர் கோபம்நிருபர்களை வெளியேற்றிய பின், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் பிரச்னைகளை அடுக்கி கொண்டே சென்றனர். இதில், அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். அப்போது, 1ம் மண்டல தலைவர் சக்திவேல், 'உடனடியாக கூட்டத்தை முடிக்க வேண்டும்' என்று தெரிவித்தார். அதன்பின் கூட்டம் முடிக்கப்பட்டது. பின், இருக்கை விட்டு எழுந்து வந்த மேயர் கவிதா, ''கூட்டத்தில், கவுன்சிலர்கள் கேள்விக்கு நான் பதில் அளித்து கொண்டு இருக்கிறேன். அப்படியிருக்கையில், கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் கூற முடியும். கூட்டத்தை நடத்துவது, முடிப்பது என்பது மேயருக்கு உரிய அதிகாரம்,'' என கோபமாக கூறி விட்டு வெளியேறினார்.