குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் தாலுகா, சிந்தாமணிபட்டியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தனியார் சுண்ணாம்பு கல் குவாரி அமைக்க, மக்கள் கருத்து கேட்புக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. சிந்தாமணிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, வரவணை கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் சுரங்க திட்டம் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூகஆர்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், வரவணை கிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, சுண்ணாம்பு கல் குவாரி பகுதிகள், அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அருகிலேயே குடியிருப்புகள், குளம், கோவில், விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. மேற்படி சுண்ணாம்பு கல் குவாரியை அமைத்தால், வரவணை பஞ்.,க்கு குடிநீர் ஆதாரம் கிடைக்காத நிலை உருவாகும். விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கால்நடை வளர்ப்பு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, வரவணை கிராமத்தில் அமைக்க உள்ள சுண்ணாம்பு கல் குவாரி திட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.பின், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு, பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.