உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு தொல்லை: பொதுமக்கள் பீதி

கொசு தொல்லை: பொதுமக்கள் பீதி

கரூர்:வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், கரூர் மாநகராட்சி பகுதிகளில் தற்போது கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் துாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.கரூர் மாநகராட்சி பகுதியை சுற்றி, அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் செல்கிறது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது. வாய்க்கால்களில் தற்போது, சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதனால், கரூர் மாநகராட்சி பகுதியில் பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், வசிக்கும் பொது மக்கள் இரவு நேரத்தில், கொசுக்கடியால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்தாண்டு இதே சீசனில், பகல் நேரத்தில் கடிக்கும், 'ஏடிஸ்' கொசுவால், கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். சிலருக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கரூர் மாநகராட்சியில் உள்ள எந்த பகுதிகளிலும், குப்பைகளை தேங்கவிடாமல் அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ