உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணகிரி பெரிய ஏரியில் அவசரமாக விடப்பட்ட மீன் பிடி குத்தகைக்கு எதிர்ப்பு

கிருஷ்ணகிரி பெரிய ஏரியில் அவசரமாக விடப்பட்ட மீன் பிடி குத்தகைக்கு எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, படேதலாவ் எனப்படும் பெரிய ஏரியில், 5 சதவீத நீர் கூட இல்லாத நிலையில், மீன்பிடி குத்தகை உரிமம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில், 269 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது படேதலாவ் ஏரி என அழைக்கப்படும் பெரிய ஏரி. இந்த ஏரிக்கு வேப்பனஹள்ளி அருகே மார்கண்டேயன் நதியின் குறுக்கே கட்டப்பட்ட குப்பச்சிப்பாறை தடுப்பணையின் இடது புற கால்வாய் வழியாகவும், மழை நீருமே ஆதாரமாக உள்ளன. இங்கு கடந்த, 2005க்கு பிறகு பல ஆண்டுகளாக நீர்வரத்து குறைந்த வண்ணம் உள்ளது. இந்த ஏரியின் நீரே பர்கூர் ஒன்றியத்தின், 13 ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.யார்கோள் அணை கட்டி முடிக்கப்பட்ட பின், பெரிய ஏரிக்கான நீர்வரத்து சீராக இல்லாமல், மழை பெய்யும் போது மட்டும் தேங்குவதும், சில நாட்களில் வற்றி விடுவதுமாக உள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்த போதும் பெரிய ஏரியில், 5 சதவீத நீர் கூட இருப்பு இல்லை. மேலும் நீர்வரத்தின்றி பல பகுதிகள் வறண்டு விளையாட்டு மைதானமாக மாறி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நீரே இல்லாத பெரிய ஏரியில் மீன்பிடி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த ஏரி தற்போது மீன்வளத்துறைக்கு சென்று, மீனவர் சங்கங்களுக்கு அவசரமாக வழங்கப்பட்டுள்ளது. ஜூலை, 1ல் கிருஷ்ணகிரி பார்வத ராஜகுல மீனவர் சங்கத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, 30க்கும் மேற்பட்டோர் பொதுபணித்துறை, மீன்வளத்துறை அலுவலகத்தில் புகாரளித்தோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித்துறையிடம் இருந்து மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் மீன்பிடி குத்தகை உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் மீனவர் சங்கத்திற்கு உரிமை வழங்கி உள்ளோம் என, அதிகாரிகள் அலட்சியமாக தெரிவிக்கின்றனர். தற்போது ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ளதால், 1.13 லட்சம் ரூபாய்க்கு மட்டும் குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள், வரும் ஆண்டுகளில் ஏரியின் முழுபரப்பு, நீரை கணக்கிட்டு குத்தகை தொகை நிர்ணயிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்றனர்.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரத்தினம் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவு படியும், புதிய அரசாணை படியும், பெரிய ஏரி மீன்பிடி குத்தகை உரிமையை மீனவர் சங்கத்திற்கு வழங்கி உள்ளோம். பலர் குத்தகை கோரி மனு அளிக்கின்றனர். யார் மனு அளித்தாலும், நாம் முடிவு செய்ய முடியாது. இது குறித்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, எத்தனை பேர் வந்தாலும், அவர்களையும் உரிமத்தில் இணைக்க வழி உள்ளது. இது தவிர அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி