கரூர் அருகே மீண்டும் புறக்காவல் நிலையம்: எதிர்பார்ப்பில் மக்கள்
கரூர்: கரூர் அருகே, மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு முன், போலீஸ் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதில், போலீசார் ஷிப்ட் முறையில் பணியில் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து, புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசார், தகவல் கொடுத்து வந்தனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் எளிதாக சமாளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், அந்த பகுதியில் மேம்பாலத்துடன் கூடிய, குகை வழிப்பாதை அமைக்கப்பட்ட போது, புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டு, பிறகு அகற்றப்பட்டது. தற்போது, மேம்பாலம் கட்டப்பட்டு, குகை வழிப்பாதையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், புறக்காவல் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என, அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.