பள்ளப்பட்டி பள்ளி மாணவியர் கால்பந்தில் இரண்டாம் இடம்
அரவக்குறிச்சி:முதல்வர் கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியில், அரசு உதவி பெறும் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து, ரூ.36 ஆயிரம் ரொக்க பரிசு பெற்றனர்.கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையில், மாணவியருக்கான முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர். இவர்கள் முதல் போட்டியில், பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை, 1--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டியில் ஈசநத்தம் பள்ளி அணியுடன் விளையாடி இரண்டாம் இடம் பிடித்தனர். இந்த அணிக்கு இரண்டாம் பரிசான, 36 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.