சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி பணத்தை மீட்டுத்தர மக்கள் புகார்
குளித்தலை:குளித்தலை அடுத்த தோகைமலை, தரகம்பட்டி, கரூர் ஆகிய பகுதிகளில், 'எஸ்.எம்., சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், மாத ஏல சீட்டு, தீபாவளி சீட்டு, நகை சீட்டு நடத்தி, மக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இதில், தோகைமலை யூனியன் பகுதி, தரகம்பட்டி பகுதிகளில், 20 முதல், 50 பேர் வரை, 500 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன், நிறுவனத்தை நடத்திய வினோத், முருகானந்தம் ஆகிய இருவரும், நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர். இதையடுத்து, தீபாவளி சீட்டு, ஏல சீட்டுக்காக பணம் கட்டியவர்கள், அவர்களின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தோகைமலை போலீசில், நேற்று மதியம் புகாரளித்தனர். மேலும், டி.எஸ்.பி., சப்கலெக்டர் ஆகியோர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர்.