வெள்ளியணை கடைவீதி சாவடியில் மேற்கூரை அமைக்க மக்கள் கோரிக்கை
கரூர், வெள்ளியணை கடைவீதி பகுதியில் உள்ள சாவடியில், மேற்கூரை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர்-திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை உள்ளது. அதிரசம் உற்பத்தி அதிகளவில் நடக்கும் வெள்ளியணை வழியாக, பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு பொது மக்கள் வந்து செல்கின்றனர். கரூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களுக்கு செல்ல, வெள்ளியணை கடைவீதி பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்புக்கு வர வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளாக, வெள்ளியணை கடைவீதி பகுதியில் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், சாவடியை இடித்து தள்ள, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். ஆனால், பொதுமக்கள் சாவடியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், மேற்கூரை மட்டும் அகற்றப்பட்டது. தற்போது, மழைக்காலம் தொடங்கிய நிலையில், பஸ்சுக்காக வெள்ளியணை கடைவீதி வருவோர் நிற்க முடியாமல் அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் புகுகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் உள்ள, சாவடிக்கு மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை விரிவாக்க பணிகளும் கிடப்பில் உள்ளது. எனவே பஸ்சுக்காக காத்திருப்போர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் வசதிக்காக சாவடியில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.