நெல் சாகுபடியில் பூச்சி தாக்குதல் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்
கரூர், சம்பா நெல் சாகுபடியில் பூச்சி தாக்குதல் தென்பட்டால், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தட்பவெட்பநிலை காரணமாக சம்பா சாகுபடியில், நெற்பயிரில் ஒருசில இடங்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலைச்சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது. தண்டு துளைப்பான் தாக்குதலில், இளம்பயிர் நடுக்குருத்து வாடி காய்ந்து விடும் நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி வெண் கதிர்களாக காணப்படும். இலை சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து, பச்சையத்தை சுரண்டி வெண்மையாக காணப்படும். புகையான் தாக்கிய பயிர்களில் காய்ந்து 'பயிர் தீய்ந்தது' போன்ற அறிகுறிகள் தென்படும். சில இடங்களில் நெல் வயல்களில் உவர் தன்மையினால் பாசி வளர்ச்சி தென்படுவதுடன் பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நெல் வயல்களில் மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.