மழை எதிரொலி: எலுமிச்சை பழம் விலை சரிவு
கரூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக, வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை பழம் விலை குறைந்தது.கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை கோடைக்காலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழம் ஒரு கிலோ, 200 ரூபாய் வரை விற்றது. நடப்பு மே மாதம், இரண்டாவது வாரம் முதல், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய துவங்கியது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை உற்பத்தி அதிகரித்தது.இதையடுத்து, கரூர் காமராஜர் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுகளுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம், 110 முதல், 120 ரூபாய் வரை விற்றது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கோடைக்காலத்தில், அக்னி நட்சத்திர காலம் கடந்த, 28ல் நிறைவு பெற்றது. எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தென் மேற்கு பருவ மழை காலம் துவங்கியுள்ளதால், பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், எலுமிச்சை பழத்தின், விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.