உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செங்காந்தள் மலர் கிலோ ரூ.3,000

செங்காந்தள் மலர் கிலோ ரூ.3,000

அரவக்குறிச்சி, செங்காந்தள் மலர் கிலோ, 3,000 ரூபாய்க்கு மேல் விலை போவதால், சாகுபடி பணியில் விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படும் செங்காந்தள் மலர், பெரும்பாலான பகுதிகளில் இல்லாமல் போய்விட்டன. இந்நிலையில், இதன் விதைகளுக்காக, அரவக்குறிச்சி ஒன்றியத்தில் சில விவசாயிகள் செங்காந்தள் மலர் சாகுபடியில் இறங்கி உள்ளனர். மொண்டிதாங்கரை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் செங்காந்தள் மலர் சாகுபடி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள், முருங்கை சாகுபடிதான் செய்கின்றனர். தமிழகத்தில் மொத்த முருங்கை உற்பத்தியில், 60 சதவீதம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில்தான் நடக்கிறது. ஏனென்றால், இந்த பகுதி முழுதும் மானாவாரியாகும். எனக்கு, 5 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக செங்காந்தள் மலரை சாகுபடி செய்து வருகிறேன். இரும்பு கம்பிகள் ஊன்றி, கட்டைகளை மேலே அடுக்கி, நைலான் கயிறுகளால் கட்டி பந்தல் போல அமைத்து, மலர் கொடி படர்ந்து பரவும் வகையில் ஏற்படுத்த வேண்டும்.மலரின் விதையானது மருத்துவ குணங்கள் நிறைந்தது. விதையை கொண்டு தயாரிக்கப்படும் மருந்தை அளவாக பயன்படுத்தினால், பெண்களின் கர்ப்பப்பை பலமாகும் என கூறுகின்றனர். ஜெர்மனிக்கு அதிகம் செங்காந்தள் மலரின் விதைகள் ஏற்றுமதியாகிறது. எங்களிடம் கிலோ, 3,000 ரூபாய்க்கு வாங்கி செல்லும் இடைத்தரகர்கள், அதை வெளிநாட்டுக்கு பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்கின்றனர். மருத்துவ பயன்கள் கொண்டது செங்காந்தாள், மானாவாரி பூமியில் எங்களை கரை சேர்க்கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி