மழை நீரில் மூழ்கிய தரைப்பாலம் உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
கரூர், கரூர் அருகே, பல ஆண்டுகளாக தரைப்பாலம் தரம் உயர்த்தப்படாததால், மழைக் காலங்களில் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையின் குறுக்கே வெண்ணிலை என்ற இடத்தில், கழிவுநீர் ஓடை இடையே தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன் வழியாக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான, வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் போது கழிவுநீர் ஓடையில், அதிகப்படியான தண்ணீர் தரைப்பாலத்தை மூழ்கிய நிலையில் சென்றது. அப்போது, அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல், அவதிப்பட்டனர். பல நாட்களாக, தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றதால், சாலையில் பாசானம் பிடித்துள்ளது.இரவு நேரத்தில் உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையில் செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றன. எனவே, உப்பிடமங்கலம்-சேங்கல் இடையே, வெண்ணிலை என்ற இடத்தில் உள்ள, தரைப்பாலத்தை தரம் உயர்த்தி, உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.