நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள செடி-, கொடிகளை அகற்ற கோரிக்கை
கரூர், அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள செடி, கொடிகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நங்காஞ்சி ஆற்றில் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து முட்புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக துார்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அரவக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: நங்காஞ்சி ஆற்றின் மூலம் விவசாயிகள் பலர் பயனடைந்து வந்தனர். தற்போது ஆற்றில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரும் போது ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசிகிறது. அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. ஆற்றின் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர். அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மிகவும் பாதிக்கப்படும். ஆற்றை துார்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.