இனுங்கூர் அரசு விதைப்பண்ணையில் வேளாண் கல்லுாரி அமைக்க கோரிக்கை
குளித்தலை: 'இனுங்கூர் அரசு விதைப்பண்ணையில், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்' என, காவிரி படுகை விவசாயி கள் கூட்டமைப்பு தலைவரும், வேளாண் பல்-கலை முன்னாள் இயக்குனருமான வளையப்பட்டி ஜெயராமன், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆக., 21ல் கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்-பட்டது. அதையேற்ற தமிழக அரசு, 2021 டிச.,ல் அரசாணை வெளியிட்டது. மேலும், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி, மணவாசியில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில், 25.56 ஏக்கர் பரப்பளவில், இந்த வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குளித்தலை யூனியன், இனுங்கூர் அரசுக்கு சொந்தமான மாநில விதைப்-பண்ணை இயங்கி வருகிறது. இதில், 205.44 ஏக்கர் நிலம் அரசு வேளாண் துறைக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில் தற்-போது, 70 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அரசு விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள நிலம் காலியாக உள்ளது. எனவே, தமிழக அரசு, வேளாண்மை துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர், கரூர் மாவட்டத்திற்கு புதிய அரசு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க, அரசுக்கு சொந்தமான விதைப்பண்ணையில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.