குளித்தலை: அய்யர் மலையில் குறிஞ்சி அறிவியல் தொழில்நுட்ப தாவரவியல் பூங்கா அமைக்க காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் ஊராட்சி, அய்யர் மலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் ரத்தினகிரீஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் குறிஞ்சி அறிவியல் தொழில்நுட்ப தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாவுக்கு காவேரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வலையபட்டி ஜெயராமன் கோரிக்கை வைத்து மனு எழுதியுள்ளார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இக்கோயில் குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் குளித்தலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் செங்குத்தாக 1017 படிகள் கொண்ட மலையின் மேல் ரத்தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இக்கோயில் சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. விரைவில் 'ரோப் கார்' வசதியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்த அய்யர்மலை கிரிவலப் பாதைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. இங்குள்ள வனம், சுற்றுச்சூழல் பச்சை நிறமாக காணப்படுகின்றது. மரங்களும், புதர்களும் ஆண்டு முழுவதும் பசுமையாக உள்ளன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழா நாட்கள், பவுர்ணமி கிரிவலம், மற்றும் முக்கிய நாட்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அய்யர் மலையை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மரங்களுடன் பூர்வீக இனங்கள் மற்றும் கவர்ச்சியான அயல்நாட்டு மர இனங்கள் உள்ளன. இங்கு குறிஞ்சி அறிவியல் தொழில்நுட்ப தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும். அரிய தாவரங்கள், மூலிகை செடிகள், மலர் செடிகள், கற்றாழை தாவரங்கள் போன்றவைகளை உற்பத்தி செய்ய ஒரு ஆராய்ச்சி மையமும், ஒரு பசுமை குடியிலும் அமைக்க வேண்டும்.மேலும் குறிஞ்சி அறிவியல் தொழில்நுட்ப தாவரவியல் பூங்காவில் மரம் நீதிமன்றம் பனை, நீதிமன்றம் சுவர் ஓவிய நடைபாதை, போன் சாய் தோட்டம், குறுக்கு நெடுக்காக அடுக்கப்பட்ட தட்டி தோட்டம், இந்திய புத்தக தோட்டம், ஜப்பான் தோட்டம், நீர் மற்றும் பாறை தோட்டம், மூழ்கிய தோட்டம், ஆய்வுப்பொருள் தோட்டம், முடக்கப்பட்ட நட்பு வளைவுகள், செங்குத்து தோட்டங்கள், 27 நட்சத்திர தோட்டம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கு தேவையான தண்ணீர் மையிலாடியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து ஐந்து குதிரை திறன் கொண்ட மின்சார மோட்டார் அமைத்து குழாய் மூலம் அய்யர் மலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இது குறித்து தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு நிறுவனம் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை அதிகாரிகள் ஆலோசனைகளை பெற்று அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் குறிஞ்சி அறிவியல் தொழில்நுட்ப அறிவியல் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இக்கோவிலை சுற்றி குறிஞ்சி அறிவியல் தொழில்நுட்ப அறிவியல் பூங்கா அமைவதன் மூலம் கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பயனடைவர். எனவே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சுற்றி உள்ள கோயில் நிலத்தில் கிரிவலப் பாதையில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் குறிஞ்சி அறிவியல் தொழில்நுட்ப தாவரவியல் பூங்காவை நடப்பு 2024 - 25ம் ஆண்டில் இந்து சமய அறநிலைத்துறை நிதியில் அமைப்பதற்கு தமிழக முதல்வர் மற்றும் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.