| ADDED : ஜூன் 18, 2024 07:24 AM
கரூர் : கரூர் அருகே, தரைக்கடை நடத்த அனுமதிக்ககோரி, வியாபாரிகள் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.கரூர் அருகே காந்தி கிராமத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்படுகிறது. அதன் இடது புறத்தில், 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த வழியாக சவக்கிடங்குக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட, வாகனங்கள் செல்ல சிரமம் உள்ளதாக கூறி, கரூர் மாநகராட்சி நிர்வாகம், கடைகளை அகற்றகோரி சமீபத்தில் உத்தரவிட்டது.அதை கண்டித்து, நேற்று மாலை கரூர்-திருச்சி சாலை காந்தி கிராமத்தில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என, ஐந்து வியாபாரிகளை அழைத்து சென்றனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் முடிவடைந்தது.