கரூர் அருகே சாலை மறியல்: 150 ஆசிரியர்கள் கைது
கரூர்:கரூர் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், ஆசிரியைகளை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில், மாநிலம் முழுவதும் நேற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை, 243 ஐ ரத்து செய்ய வேண்டும், உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.கரூர் அருகே, வெள்ளியணை சாலையில் உள்ள, வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் முன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருதயசாமி தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து, பல்வேறு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள் உள்பட, 150 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.