சாலையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு; ஓட்டுனர்கள் அவதி
சாலையோரத்தில் குப்பைக்குதீ வைப்பு; ஓட்டுனர்கள் அவதிகரூர், டிச. 11-கரூரில், சாலையோரம் குப்பைக்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் நகரை சுற்றி திருச்சி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் சேலம் சாலைகள் செல்கின்றன. கரூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை, ஆங்காங்கே நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர். காற்று வீசும்போது சாலையில் குப்பை பறக்கிறது. சிலர் குப்பையை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். கரூர், சேலம் பழைய சாலையில் உள்ள வெண்ணைமலையில் குப்பைக்கு தீ வைத்து எரிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இங்குள்ள சாலையோரம் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், குப்பையை எடுத்து செல்வதற்கு பதிலாக, சாலையோரம் குவித்து எரித்து விடுகின்றனர். இதில் வரும் புகையால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் கஷ்டப்படுகின்றனர்.கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டப்படும் குப்பையை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.