கரூர் வட்டாரத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடக்கம்
கரூர், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, கரூர் வட்டாரத்தில் சிலைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஆண்டுதோறும் ஆவணி மாதம், சதுர்த்தி நட்சத்திரத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது, நாடு முழுவதும் ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தி, மூன்றாம் நாள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும்.அதற்காக, ஐந்து அடி முதல், 15 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கி விடும். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும், 27ல், கொண்டாடப்படுகிறது. இதற்காக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்யும் வகையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.மூன்று அடி முதல், 10 அடி வரையிலான சிலைகள், 100 முதல், 23 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு புதிய வரவாக, புல்லட் விநாயகர் சிலை விற்பனைக்கு வந்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும், ஏழு நாட்கள் உள்ள நிலையில், விற்பனை மட்டுமின்றி, ஆர்டர் கொடுக்கும் பணிகளும் தொடங்கியுள்ளதாக, சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.