குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணி: கலெக்டர் ஆய்வு
குளித்தலை: குளித்தலை நகராட்சி பகுதியில், உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில், துாய்மை பணிகளை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.குளித்தலை வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் நேற்று முன்தினம் காலை 9:00 முதல் நேற்று காலை 9:00 மணி வரை பல்வேறு பணிகள் ஆய்வு மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் தங்க வேல் பெற்றார், நேற்று காலை குளித்தலை அண்ணா நகர், உழவர் சந்தை சாலை, நுாலகம் சாலையில் தரைக்கடை நடத்தி வரும் பொது மக்களிடம், கலெக்டர் தங்க வேல் தேவையில்லாத காய்கறிகளை சேமித்து நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து, துாய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களிடம், குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்க வேண்டும், பணியாளர்கள் முக கவசம் அணிய வேண்டும், என கூறினார்.அப்போது, வடிகாலில் கழிவுநீர் தேக்கம் ஏற்படுகிறது, குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பு குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, மாரியம்மன் கோவில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், காலை உணவு திட்டத்தில் சக மாணவர்களுடன் கலெக்டர் உணவு சாப்பிட்டார்.நகராட்சி கமிஷினர் நந்தகுமார், அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.