உச்ச நீதிமன்ற சிறப்பு குழு கரூரில் ஆய்வு
கரூரில் முகாமிட்டுள்ள, உச்ச நீதிமன்ற சிறப்பு குழுவினர், 41 பேர் பலியான இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்., 27-ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுவை நியமித்து உள்ளது. இவர்கள் கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையை ஆய்வு செய்கின்றனர். அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழுவினர், 41 பேர் உயிரிழந்த வேலுச்சாமிபுரத்திற்கு நேற்று சென்று, 20 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். பின், உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் நால்வர்; கூடுதல் எஸ்.பி.,க்கள் மற்றும் கரூர் மாவட்ட எஸ்.பி., ஜோஸ்தங்கையா ஆகியோரிடம், இரண்டு மணி நேரத்திற்கு மேல், விசாரணை நடத்தினர். - நமது நிருபர் -