காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கரூரில் டாஸ்மாக் சங்கத்தினர் ஆலோசனை
கரூர் : மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக, கரூர் டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழகத்தில், மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோர், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களை, மது பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விற்கும் போது, அதன் அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும். பாட்டிலை திரும்ப வழங்கியதும் கூடுதலாக பெற்ற தொகை திரும்ப தரப்படும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், 15 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏழு மாவட்டங்களில் பகுதி அளவுக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், நவம்பர் 30க்குள் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, தமிழகம் முழுதும் அமல்படுத்த வேண்டும் என செப்.,4ல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், கரூர் மாவட்ட டாஸ்மாக்கில், 84 கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, கரூர் பசுபதிபாளையம் தொழில்பேட்டையில், மாவட்ட மேலாளர் விஜயசண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தொ.மு.ச., தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் கலந்துகொண்டன. கூட்டத்தில், கடையில் உள்ள விற்பனையாளர்களால், மதுபாட்டில்களில் லேபிள் ஒட்ட நேரம் கிடைக்காது. இதனால், ஆட்கள் நியமனம் செய்து பாட்டிலில் லேபிள் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிகளை சேமித்து வைக்க இடம் கிடையாது உள்பட பல்வேறு கோரிக்கை முன் வைக்கப்பட்டன. இதில், கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சங்கம், கூட்டத்தை புறக்கணித்து உள்ளது.