லாரி டிரைவரை தாக்கிய வழக்கில் ரவுடி உள்பட மூன்று பேர் கைது
கரூர், லாரி டிரைவரை தாக்கிய வழக்கில், ரவுடி ராமசந்திரன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் அருகே வெள்ளியணையை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 44. இவர் மீது, பல வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன. இவர் மற்றும் கூட்டாளிகளான, அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், 30, தரணிதரன், 25, ஆகிய மூன்று பேரும் கடந்த, 24ம் தேதி வெள்ளியணை அருகில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தனியார் நிறுவனத்துக்கு சிமென்ட் ஏற்றுவதற்காக, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பாலு, 25, என்பவர் ஓட்டி வந்த லாரி பின்னால் வந்துள்ளது.இந்நிலையில், லாரி சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் குறுக்கே வந்துள்ளார். இதனால் லாரி டிரைவர் பாலு ஹாரன் அடித்துள்ளார். காரில் சென்ற ராமச்சந்திரன், மனோஜ்குமார், தரணிதரன் ஆகியோர் கோபமடைந்து, லாரி டிரைவர் பாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை தாக்கியதில் காயமடைந்த டிரைவர் பாலு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி, ராமச்சந்திரன் உள்பட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.