கனரக வாகனங்களின் அதிக வெளிச்சம் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் அவதி
அரவக்குறிச்சி, கனரக வாகனங்களில் வெளிப்படும் அதிகபட்ச வெளிச்சத்தால், எதிரே வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், ஆம்னி பஸ்கள், 100 கி.மீ., வேகத்தில் செல்கின்றன. சில வாகனங்களில், அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், எதிரே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுவாக விபத்திற்கு வேகம் தான் காரணம் என்றாலும், இரவில் வாகனங்களின் அதிக வெளிச்சத்தால் விபத்துகள் நடப்பதையும் மறுக்க முடியாது. இரு சக்கர வாகனங்களை, கனரக வாகன ஓட்டுனர்கள் பொருட்படுத்தாமல், எதிரே வரும்போது வெளிச்சத்தை குறைப்பதில்லை. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாற வேண்டிய நிலை உள்ளது.