வி.ஏ.ஓ., மாநில நிர்வாகிகள் தேர்தல்; கரூரில் ஓட்டுப்பதிவு
கரூர் வி.ஏ.ஓ., மாநில நிர்வாகிகள் தேர்தலுக்கு, கரூரில் ஓட்டுப்பதிவு நடந்தது.தமிழக வி.ஏ.ஓ., அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர், துணைத் தலைவர், பொது செயலாளர், பொருளாளர், செயலாளர்கள் பதவிக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடந்தது. மாநில தலைவர் பதவிக்கு சசிகுமார், விஜயபாஸ்கர், ஜீவரத்தினம், பொது செயலாளர் பதவிக்கு குமார், வீரபாண்டியன், பொருளாளர் பதவிக்கு தியாகராஜன், நல்ல கவுண்டன், துணைத் தலைவர் பதவிக்கு ரகுவரன், விஜயகுமார், ஜான் போஸ்கோ, செயலாளர்கள் பதவிக்கு உதயசூரியன், கலைச்செல்வி, பவளச்சந்திரன், புஷ்பகாந்தன், ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலையொட்டி, அந்தந்த மாவட்டங்களில் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட, ஓட்டுச்சாவடி மையத்தில் தேர்தலை நடத்தினர். ஓட்டுச்சீட்டு முறைப்படி தேர்தல் நடந்தது. தேர்தல் பார்வையாளராக ராஜகுரு, முகமது ஷபிர் ஆகியோர் இருந்தனர்.மாவட்டத்தில் உள்ள, 17 பெண்கள் உட்பட, 54 வி.ஏ.ஓ., அலுவலர்கள் தங்களது அடையாள அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து வாக்களித்தனர். காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.