மாயனுார் கதவணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று, 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக கடந்த, 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 12 ஆயிரத்து, 880 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 15,711 கன அடியாக அதிகரித்தது. அதில், காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்காக, 14 ஆயிரத்து, 891 கன அடியும், மூன்று பாசன வாய்க்கால்களில், 1,320 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 141 கன தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 22.83 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.