அமராவதி தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
அமராவதி தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்புகரூர், நவ. 29-கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நடப்பாண்டு, தென்மேற்கு பருவ மழையால், கடந்த ஜூலை, 18ம் தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து, இரு மாதம் வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டதோடு, இரு மாவட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 87.93 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3859.84 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,640 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில், 1,767 கனஅடி நீர் திறக்கப்பட்டது.இதனால், கரூர் செட்டிபாளையம் தடுப்பணை, கரூர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. நேற்று காலை, 6:30 மணி நிலவரப்படி, கரூர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் நீர் வரத்து, 243 கன அடியாக உள்ளது.இதுபோல, கரூர் மாயனுார் கதவணையில் நீர்வரத்து நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 1,254 கன அடி தண்ணீர் வருகிறது. இதில் ஆற்றில், 654 கன அடியும், மூன்று பாசன வாய்க்காலில், 600 அடியும் திறக்கப்பட்டு வருகிறது.