உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் திருச்சி இடையே இரட்டை ரயில் பாதையாக மாறுவது எப்போது?

கரூர் திருச்சி இடையே இரட்டை ரயில் பாதையாக மாறுவது எப்போது?

கரூர்: கரூர் திருச்சி ரயில்வே பாதை எப்போது, இரட்டை பாதையாக அமைக்கப்படும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சேலம் கரூர் ரயில்வே பாதை கடந்த, 2013, கரூர் திண்டுக்கல் ரயில்வே பாதை, 1985ல், அமைக்கப்பட்டது. ஆனால், ஈரோடு கரூர் திருச்சி ரயில்வே பாதை குளித்தலை வழியாக, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. அதில், ஈரோடு கரூர் வரையிலும் மட்டும் உள்ள, ஒற்றை ரயில்வே பாதையை, இரட்டை பாதையாக மாற்ற கடந்த, 2020ல் மத்திய பட்ஜெட்டில், 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் குளித்தலை திருச்சி வரையிலான ஒற்றை ரயில்வே பாதையை, இரட்டை பாதையாக மாற்ற, நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகவில்லை.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இந்திய ரயில்வே வாரியம் ஆலோசனைபடி, பழமைவாய்ந்த ஈரோடு கரூர் குளித்தலை திருச்சி ஒற்றை ரயில்வே பாதையை, இரட்டை பாதையாக மாற்ற ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், கரூர் குளித்தலை திருச்சி வரை, ஒருபக்கம் காவிரியாறும் மற்ற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இதை தவிர ஆங்காங்கே, ஏற்கனவே உள்ள ஒற்றை ரயில்வே பாதையை சுற்றி, காவிரியாற்றின் கிளை வாய்க்கால்கள் செல்கிறது. இதனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், எப்படியோ ஒற்றை ரயில்வே பாதையை அமைத்து விட்டனர்.தற்போது, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, கரூர் குளித்தலை திருச்சி வரை, ஒற்றை ரயில்வே பாதையை சுற்றி, குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும், ஒன்றை ரயில்வே பாதை குறுக்கும், நெடுக்குமா வளைந்து செல்வதால், இரட்டை ரயில்பாதை அமைக்க பெரும் சவாலாக உள்ளது. இதனால், முதல் கட்டமாக ஈரோடு கரூர் வரை இரட்டை ரயில் பாதை அமைக்க கடந்த, 2020 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால், பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது, நிதி பற்றாக்குறையாக உள்ளது.அந்த பணிகள் முடிந்த பிறகுதான், கரூர் குளித்தலை திருச்சி வரை, இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், சேலம் கரூர் திண்டுக்கல் ஒற்றை ரயில் பாதையில், வாங்கல் மோகனுார் இடையே மட்டும் காவிரியாறு செல்கிறது. அந்த இடத்தில், இரட்டை பாதை அமைக்க இடம் தயாராக உள்ளது. கரூர் திண்டுக்கல் பாதையில் எந்த பிரச்னையும் இல்லை. இதனால், சேலம் கரூர் திண்டுக்கல் ரயில்வே பாதையில், இரட்டை ரயில்பாதை அமைக்க பணிகள் விரைவில் துவங்க ஆய்வு நடக்கிறது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை