சாக்கடை கால்வாய் வசதி செய்து தரப்படுமா
கரூர்: கரூர் அருகே, மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக தேங்கும் அவல நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர்.கரூர் மாநகராட்சி, நரிக்கட்டியூர் தமிழ் நகரில், 200க்கும் மேற்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில், பல ஆண்டுகளாக, போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், மழைநீருடன், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கரூர் மாநகராட்சி, நரிக்கட்டியூர் தமிழ் நகர் பகுதியில், அ.தி.மு.க., ஆட்சியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாக்கடை கால்வாய் வசதி அமைப்பதற்குள், அ.தி.மு.க., ஆட்சி மாறி விட்டது. தி.மு.க., பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகளாகியும், தமிழ் நகர் பகுதியில் போதிய சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை.மழைக்காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு, வெளியே செல்ல முடியாது. போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருகிறது. கரூர் - திருச்சி பிரதான சாலையில் உள்ள தமிழ் நகரில் சாக்கடை வசதிகளை செய்து தர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எரியாத மின் விளக்குகளை எரிய வைத்து, நாள்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.