மாயனுார் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரூர், :மாயனுார் ரயில்வே கேட் பகுதியில் நேற்று வாகன நெரிசலால், கரூர் -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கரூர் -- திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி, மாயனுார் கதவணை செல்லும் சாலை வளைவில், ரயில்வே கேட் உள்ளது. மாயனுார் கதவணை பாலம், ரயில்வே கேட் வழியாக கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்ட மக்கள் தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். அதே வேளையில், கரூர் -- திருச்சி இருப்பு பாதை வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் அதிகமாக சென்று வருகின்றன. மாயனுார் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், கேட்டின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. கேட் மூடப்பட்டு, மீண்டும் திறக்கும்போது, அதிக அளவில் கார், வேன், இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் ரயில்வே கேட் பகுதியை கடந்து செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரயில்வே கேட், தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மாயனுார் ரயில்வே கேட் அருகில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாயனுார் போலீசார், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், நிரந்தர தீர்வாக, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.