தொழிலாளி கொலை? உறவினர்கள் மறியல்
கரூர்: ரயில்வே தண்டவாளம் அருகே இறந்து கிடந்த தொழிலாளி, கொலை செய்யப்பட்டதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை, புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 24; கட்டட தொழிலாளி. இவரின் மனைவி ஜனனி, 22; தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கரூர் - திருச்சி ரயில்வே வழித் தடத்தில், மாயனுார் ரயில்வே தண்டவாளத்தின் அருகே, உடலில் காயங்களுடன் மணிகண்டன் நேற்று காலை சடலமாக கிடந்தார். கரூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள், மணிகண்டனுக்கு, மாயனுாரை சேர்ந்த திருமணமாகாத பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், பெண்ணின் உறவினர்கள் அவரை அடித்து கொலை செய்து, ரயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் பேச்சு நடத்தினார். அதை ஏற்காமல், மறியலில் ஈடுபட்டதால், பசுபதிபாளையம் போலீசார், அவர்களை கைது செய்தனர்.