உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

கரூர் அருகே சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

கரூர்: கரூர் அருகே, சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூலி நிர்ணயம் செய்யக்கோரி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், தொழிற்பேட்டையில் தமிழ்நாடு அரசின், வாணிப கழக குடோன் செயல்படுகிறது. அங்கிருந்து, கரூர் மற்றும் மண்மங்கலம் தாலுகாவில் உள்ள, 225 ரேஷன் கடைகளுக்கு அரிசி உள்ளிட்ட, உணவு பொருட்கள் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.அதற்காக வாணிப கழக குடோனில், 50க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் உணவு பொருட்களை, லாரிகளில் இருந்து இறக்குவது மற்றும் ஏற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதிய ஒப்பந்ததாரர்கள் கூலியை நிர்ணயம் செய்யாமல், உணவு பொருட்களை லாரியில், ஏற்றி வைக்குமாறு சொல்லியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சுமை தொழிலாளர்கள், கூலியை நிர்ணயம் செய்யக்கோரி, லாரிகளில் உணவு பொருட்களை ஏற்றாமல் நேற்று மதியம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒப்பந்ததாரர்கள் வட மாநில தொழிலாளர்களை சிலரை, வேலைக்கு அழைத்து வந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த சுமை துாக்கும் தொழிலாளர்கள், லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த, வாணிப கழக குடோன் அதிகாரிகள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் மூலமே பணிகள் நடைபெறும் எனவும், வட மாநில தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுவர் எனவும், கூலி வழங்கலில் பழைய நடைமுறையே தொடரும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்ட சுமை துாக்கும் தொழிலாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை