| ADDED : ஜூலை 21, 2011 10:39 PM
ஓசூர்: ஓசூர் உழவர் சந்தையில், வெளிமார்க்கெட் வியாபாரிகள் மூட்டை, மூட்டையாக காய்கறிகளை கொள்முதல் செய்வதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடையும் நிலையுள்ளது.கடந்த 2000ம் ஆண்டு துவங்கப்பட்ட ஓசூர் உழவர்சந்தையில், 214 கடைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுழற்சி முறையில், பல்வேறு வகை காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர்சந்தைக்கு தினமும், 130 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதன் மூலம், 2 லட்சம் ரூபாயக்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. தமிழகத்தில் திருப்பூர் தெற்கு உழவர்சந்தைக்கு அடுத்தப்படியாக, ஓசூர் உழவர்சந்தையில் காய்கறிகள் அதிகளவு விற்பனையாகிறது. உழவர்சந்தையில் கடந்த ஒரு வாரமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 97 டன் காய்கறிகள் மட்டும் விற்பனைக்கு வந்தது. கடந்த சில மாதமாக ஓசூர் உழவர்சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர். உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள் தரமான காய்கறிகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.உழவர் சந்தையில் வியாபாரிகள் அதிகாலையிலே வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மொத்த காய்கறிகளையும் வாங்கி சென்று விடுகின்றனர். அதிகாலை 6.30 மணி முதல்தான் பொதுமக்கள் உழவர்சந்தைக்கு வர துவங்குகின்றனர். அப்போது, 75 சதவீதம் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்துவிடுவதால், பொதுமக்களுக்கு மீதமான பழைய காய்கறிகள், சேதமடைந்த காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.உழவர்சந்தை அதிகாரிகள் இவற்றை கண்டும், காணாமல் நடந்து கொள்வதால், படிபடியாக உழவர்சந்தை தனியார் மார்க்கெட் போல் செயல்பட துவங்கியுள்ளதால், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான காய்கறிகள் கிடைப்பது கேள்விகுறியாகியுள்ளது.இது குறித்து உழவர்சந்தை அலுவலர் மேகநாதனிடம் கேட்டபோது, ''வியாபாரிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. உழவர்சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வந்த விவசாயிகளே, இங்கு காய்கறிகளை வாங்கி வெளியிடங்களுக்கு விற்பனை செய்கின்றனர், '' என்றார்.