உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒரு லட்சம் வழக்கறிஞர்களை திரட்டி சென்னையில் போராட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை

ஒரு லட்சம் வழக்கறிஞர்களை திரட்டி சென்னையில் போராட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: ''வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றாவிட்டால், சென்னையில், 1 லட்சம் வழக்கறிஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர், வழக்கறிஞர் காளியப்பன், கடந்த சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரி அருகே கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவதை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் தலைமையில், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து, 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக வந்து கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். ஓசூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ஆனந்தகுமார், ஓசூர் யுனைடட் வழக்கறிஞர் சங்க தலைவர் விஜயராகவன், தேன்கனிக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் மலர்வண்ணன், போச்சம்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பின் தலைவர் மாரப்பன் பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், 6 பேர் மீது மட்டுமே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரை, 40க்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களை பிணையில் எடுக்க எந்த வழக்கறிஞரும் செல்ல கூடாது. பொதுவாக போலீசாருக்கும், வழக்கறிஞருக்கும் மோதல் போக்கு இருக்கும். தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலைக்குப்பின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இது வழக்கறிஞர்கள் ஒற்றுமையால் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, சைதாப்பேட்டையில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், வழக்கறிஞர்களின் பாதுகாப்புக்கான சட்டம் இயற்றப்படவில்லை. அண்டை மாநிலமான கர்நாடகா, ராஜஸ்தானில் இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதைப்போல தமிழக அரசும், மத்திய அரசும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை விரைவில் அமல்படுத்தும். இது குறித்து நாம் தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். இந்த சட்டங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழகத்திலுள்ள, 1.36 லட்சம் வழக்கறிஞர்களில், 1 லட்சம் பேருடன் சென்னையில் பேரணி நடத்துவோம். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை