| ADDED : ஜூலை 09, 2024 06:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலந்தாய்வு நடந்து வரும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டார கிளை தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அரசாணை எண்: 243ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால், இறுதி தீர்ப்பு வரும் வரை அறிவித்துள்ள கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். * ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன், டிட்டோஜாக் கூட்டமைப்பின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.